Tuesday, June 12, 2018

நிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,

 
  மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும்,

அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன் பண்ணுனது தப்புத்தான் என்பார்,

யார் அவர் எந்த சொந்தக்காரர்,என்ன அப்படி செய்து விட்டார் அவர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த வெள்ளிடை மலை,

அவரு அப்பிடி எண்ணன்னே பண்ணிட்டாரு என்றால் அட விடுண்ணே அப்பு றம் பேசிக்கலாம் என்பார்.

காலையில் நல்ல தூக்கத்தில் இருக்கிற நேரமாகத்தான் போன் பண்ணினார். ஆறரை மணி இருக்கும்,போன் வந்து விட்டது,

இவனது செல்போனில் இருக்கிற ரிங் டோன் கொஞ்சம் சப்தமாகவே கேட்கும்.

நல்ல காதல் பாடலின் துவக்கத்தை ரிங்டோனாக இசைக்கும் அழைப்பொலி கேட்க அழகாக இருக்கும்,ரிங் டோன் வருகிற நேரம் மனதுள் ஆயிரம் பூக்கள் பூத்து மலர்ந்து அமரும்.

மலர்ந்தமர்கிற பூக்கள் ரீங்காரம் கொண்டு மனம் நெருங்கி வருகிற சமயங் களில் ரிங்டோனாக ஒலித்த பாடல் சினிமாவில் காட்சியாய் விரிவதும் அதற்கு நாயகனும் நாயகியும் கொடுத்த உடல் அசைவும் அவர்களது உடல் மொழியும் இன்னும் இன்னுமான காட்டிச் அமைப்பும் பிண்ணனி இசையுமாய் பிணைந்து கட்டி ஞாபகத்தில் வந்து போகும்,

பொதுவாகவே பாடல்களில் மனம் இழந்து போகிறதும் பாடல்கள் மனதை கொள்ளை கொள்கிற பணியும் இவனில் ஒரு சேர நடப்பதுண்டுதான்,

அதிலும் தொண்ணூறு ,எண்பது கால இசைக்கும் அதற்கடுத்ததான பாடல்க ளுல்களுக்கும் தற்ப்பொழுதான இசைக்கும் மனதில் தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பான்தான்.

டப்பாங்குத்துக்கும் நையாண்டிக்கும் மென் இசைக்கும்,இசை அதிர்வுக்கும் இவன் மனது இசைந்து பறி போனதுண்டு,

எந்த சூழ்நிலையிலும் எந்த இக்கட்டிலும் கூட இசை ரசிப்பை விட்டுக் கொ டுத்ததில்லை இவன்,அதுவும் இவனை விட்டுப்போனதில்லை.

சொந்த ஊரில் துஷ்டிக்கு போயிருந்த ஒரு மழை நாளில் நையாண்டிக்கு தலையாட்டிக்கொண்டும்காலாட்டிக்கொண்டுமாய்மதியச்சாப்பாடுகூடமறந்து போய் இழவு வீட்டின் முன் போடப்பட்ட சேரில் அமர்ந்து கொண்டி ருந்த பொழுது மனைவிதான் வந்து கூட்டிப் போனாள்.

காலையில் துஷ்டி என தகவல் சொல்லி வந்தது,அதே செல்போனில் அதே அழைப்பொலியுடந்தான்,கிளம்பிவிட்டார்கள்,பிள்ளைகள்இருவரையும்பள்ளிக் கும் கல்லூரிக்கும் அனுப்பி விட்டு/

சின்னவள் பள்ளியின் இறுதி ஆண்டில்,பெரியவள் கல்லூரியின் இளங்கலை முதலாம் ஆண்டில்/

சின்னவளை விட பெரிவயள் கொஞ்சம் முனைப்பு,ஏய் ரொம்ப ஆடதா, என் பாள் சின்னவள் பெரியவளை அடிக்கடி அதட்டியவாறே.,,,/

அந்த ஆடாதவிற்கும் அரடலுக்கும் ஒரு மென் சிரிப்பும் அலட்டலில்லாத ஒரு சின்ன அசைவுமே சின்னவளின் பதிலாக இருக்கும்,

அந்த பதிலில் போர்த்திக்கிடக்கிற வாஞ்சையும் மென் அன்பும் அந்நேரத்தில் மிகைப்பட்டுத்தெரியாத ஒரு இளம் பூவின் வாசையாய் மணக்க இவனும் இவனது மனைவியுமாய் போய் கட்டி அள்ளிக்கொள்வார்கள் பிள்ளைகளை,,,/

கண்ணுகளா கண்ணுகளா,ஒங்களப்போல புள்ளைங்க எல்லா வீடுகள்ளையும் வாச்சிட்டாங்கன்னா வீடுகள்லாம் ஒரே சோலையாகிரும்ப்பா என ஆளுக்கு ஒரு பிள்ளைக்கு ஆளாளுக்கு இரண்டு முத்தங்கள் எனக்கொடுப்பார்கள்,

இதில் பெரியவளுக்கு முத்தம் கொடுக்க தயங்கி நிற்கிற இவன் சட்டையைப் பிடித்து முத்தம் கொடுக்கச்சொல்லி வாங்கிப்போவாள் மூத்தவள்,தயங்கிய வாறே கொடுத்த முத்தம் கன்னத்திலின்றி தலையில் நெற்றி வகிடெடுத்த கொடுக்கும் போது அவள் திரும்ப எழுந்து இவன் கன்னத்தில் அழுந்த முத்த மிட்டு விட்டு ஓடிவிடுவாள்.

அப்படியாய் இரு பிள்ளைகளுமாய் கன்னத்தில் முத்தமிட்ட ஒரு காலையில் வந்து விட்ட துஷ்டிசேதிக்கு தலையசைத்து விட்டு போய் வந்தார்கள்.

இவனும் மனைவியுமாய் துஷ்டி வீட்டுக்கு போனபோது வீடே நிறைந்து கிட ந்தது, காலிலும் மனதிலுமாய் சக்கரம் கட்டிய வாழ்க்கையில் இது போலான விஷேச வீடுகளில்தான் சொந்தங்களையும் தெரிந்த மனிதர்களையும் பார்த் துக் கொள்ள முடிந்தது.

இவன் வீட்டுக்குள் போய் மாலை போட்டுவிட்டு வந்து விட மனைவி பெண்க ளுடன் அமர்ந்து துக்க்கம் விசாரித்துக்கொண்டிருந்தாள்,

ஐஸ்பெட்டிக்குள்வைக்கப்பட்டிருந்த சடலத்தைதொட்டுக்கும்பிட்டுருக்கலாம் என வெளியில் வந்தததும்தான் தோனுகிறது.

செய்ய நினைத்து செய்கிற வேலை செய்ய நினைக்கிற வேளையில் மறந்து போய் பிற்பாடாய் ஞாபகம் வருவது தவிர்க்க இயலாமல் போய் விடுவது தற்செயலா இல்லை,,,,,?தவிர்க்க இயலாத ஒன்றா என்கிற கேள்வி அடிக்கடி எழுந்து அமிழ்வதுண்டு இப்பொழுதெல்லாம் இவனில்.

வெளியில் வந்தவன் அங்கு போடப்படிருந்த சேரில் அமர்கிறான்,பக்கத்தில் இரண்டு சேர் தள்ளி கருப்பையா அமர்ந்திருந்தார்,

அண்ணன் தம்பி முறைதான் கருப்பசாமி இவருக்கு,

இவன் அவர் அண்ணன் என்பான்,அவர் இவனை அண்ணன் என்பார்.

என்னாங்கடா டேய்,,,,ஏதாவது ஒரு முடிவ சொல்லுங்கடா யார் அண்ணன் யாரு தம்பின்னு,,,என்பார்கள்இவர்கள் இருவரின் பேச்சை கேட்கும் அவர்கள்,

இருவரும் சிரித்துக்கொள்வார்க:ள் அதற்கு,

போதும்டா ,இந்தச்சிரிப்புத்தாண்டா ஒங்க ரெண்டு பேருகிட்டயும் ரொம்பப்பேர கட்டிப்போட்டுருக்கு என்பார்கள்.

இவன்,இவனுக்கு இரண்டு சேர் தள்ளி கருப்பையா அண்ணன் ,இருவரும் துஷ்டிவீட்டுக்கொட்டுகளுக்கு தலையாட்டுவர்களும் தாளத்தின் லயத்திற்கு காலாட்டிக்கொள்பவர்களும்தான்,

அவர்கள் இருவரும் அப்படியாய் கால்களையும் தலையையும் ஆட்டிக் கொள் வதைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள்,

பொதுவாக கொட்டடிக்கும் இடத்திற்கு அருகில் இருந்து தவிலின் இசையை யும் இணைந்து பாடுகிற நாதஸ்வரத்தின் மென் இழுவையையும் கேட்க மாட்டார்கள்.

வரிசை கட்டி போடபட்டிருக்கிற சேர்களில் ஒன்றை எடுத்துப்போய் தூரமாக அமர்ந்து கேட்பார்கள்,

அப்படி இல்லையென்றால் யார் வீட்டு திண்ணையிலாவது அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படி கேட்கும் போது ஆட்டிக்கொள்ளும் காலும் தலையும் பரஸ்பரம் இருவ ரையும் பேசவிடாமல் தவில்,மற்றும் நாக்ஸ்வர இசையில் அமிழ்ந்து போகும்.

அப்படியாய் அமிழ்ந்து போய் கேட்டுக்கொண்டிருந்தான் துஷ்டிக்குப்போன அன்றும்.

நலந்தானாவில் ஆரம்பித்து சௌக்கியமா கண்ணே சௌக்கியமாவில் இழுத்த நாதஸ்வரக்காரரின் இழுவையிலும் கூடவே இணைந்து கைகோர்த்துக் கொ ண்ட தவில்காரரின் இசையும் உடன் சேர்ந்து கொள்ள அதற்கு தலையசை த்தவனாய் அமர்ந்திருக்கும் போதுதான் வந்தாள் மனைவி”என்ன இன்னும் ஒங்களுக்கு சின்னப்புள்ளைன்னு நெனைப்பா என சப்தம் போட்டவாறே,,,/

”வயசுதான் ஆச்சே ஒழிய இன்னும் பொது யெடத்துல எப்பிடி இருக்கணும் ன்னு கூடவா ஒரு மனுசனுக்கு சொல்லித் தரணும்.நெருங்குன சொந்தக்கா ரங்க வீட்டுக்கு துஷ்டிக்கு வந்துருக்குறோங்குற ஒரு இது கூட இல்லாம கோயில் மாடு மாதிரி ஒக்காந்து தலையாட்டிக்கிட்டும் காலசைச்சி தாளம் போட்டுக்கிட்டும் இருந்த பாக்குறவுங்க நம்மளப்பத்தி என்ன நெனைப் பாங்க, மொதல்ல அவுங்களுக்கு நம்மளப் பத்துன எண்ணம் என்னவா இருக்கும்,,,?” சொல்லுங்க,,,,என முனங்கியவாறே இழுத்துச்செல்லாத குறையாக கூட்டிச் சென்றாள்.

சாப்பிடும் போதுதான் சொன்னான்,”என்ன இது சொந்தக்காரங்களுக்குன்னா ஒரு மனசு,மத்தவுங்களுக்குன்னா ஒருமனசுன்னு இருக்க முடியுமா சொல்லு. இதுக்குன்னு தனித்தனியாவா ரசனைய பிரிச்சி வைச்சிக்கிட்டு வாழுறது,,,,? சொந்தக்காரங்க வீட்டுக்குப்போனா கழட்டி கீழ வச்சிக்கிறதும் வெளியாளு வீட்டுக்குப்போனா கழட்டி வச்ச ரசனைய எடுத்து மாட்டிக்கிறது மாவா இருக்க முடியும்,,? எனக்கு எங்க போனாலும் ஒரு மொகம்தான்,எங்க போனா லும் ஒரு மனசுதான்,அத மாத்திக்கிறது இனி கஷ்டம்தான்,,”என இவன் சொல்லும் போது ”நாயி வால இனி நிமுத்த முடியாதுங்குறது தெரிஞ்ச கதை தான, அதுக்காக புள்ளைங்களுக்கும் அதை கத்துக்குடுத்துறாதீங்க”,,,என்றாள் முனங் கியவாறே/

சரிதான் இப்படியாய் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த மனோ நிலையில் கேட்கிற பார்க்கிற கேள்விப்படுகிற விஷயங்களை ரசிக்க முடிகிற மனோப் பான்மையை யாரை முன்னிட்டும் கழட்டி கீழே வைத்து விட இவனால் முடியவில்லைதான் இப்போதைக்கு,இனி வருங்காலங்களில் எப்படி என சொல்லி விடவும் முடியவில்லை,அது ஆதியில் இருந்து இவனில் எப்படி வளர்ந்து குடிகொண்டது எனவும் சொல்ல முடியவில்லை,

பொதுவாகவே இவனில் குடிகொண்ட கேள்வியாய் உறை கொண்டு இருப்பது ஒன்றே ஒன்றாக மட்டுமே தெரிகிறது,வயதாகி விட்டால் ரசிக்கிற மனோ பான்மை குறைந்து விடுமா அல்லது அதை கழட்டி கீழே வைத்து விடுவதா தெரியவில்லை.,,? என மனைவியிடம் இதை சொல்லி குறை பட்டுக்கொண்ட போது சொல்கிறாள்,

“ஆமாம் இப்பிடியே ரசனைமட்டம்ன்னு,ரசனைமட்டமுன்னு ஏதோ வைகை அணை நீர்மட்டம் மாதிரி சொல்லிக்கிட்டு அலைங்க,சினிமா,நாடகம் புத்தகம் படிப்பு ஈமெயில் இண்டர் நெட்டுன்னு இருந்துக்கிட்டு மாசத்துக்கு ஐநூறு அரநூறு ரூபாய்க்கு புத்தகங்கள வாங்கி அடிக்கீட்டு என்னமோ ஸ்கூல் புள்ளைங்க பரிட்சைக்கு படிக்கிற மாதிரிராத்திரி பூரா ஒக்காந்து கண்முழிச்சி படிச்சிக்கிட்டு இருக்கீங்களே வெக்கமில்லாம புத்தகம் வாங்குற துட்டுக்கு புள்ளைகளுக்கு ரெண்டு துணி மணியாவது எடுத்துப் போடலாம்,அதுகளாவது மணமா உடுத்திக்கிருமில்லஇல்ல வீட்டுக்கு ஏதாவது சாமான் செட்டாவது வாங்கிப்போடலாம்,வீட்டப்பாருங்க,என்னமோ தொடச்சி எடுத்த வீடப் போல இருக்கு,நாலு பேரு வந்தக்கூட ஒக்காருறதுக்கு நல்லதா ஒரு சேர் கூட கெடையாது,

“அங்கங்கவீடுகள்லபோயிபாருங்க,என்னென்னவாங்கிப்போட்டுருக்காங்கன்னு, வீடுகொள்ளாத சாமான்கள அடுக்கி வச்சிருக்காங்க,குடி இருக்க யெடம் காணாத வீடுகள்ல கூட பிரிஜ்ஜும் வாசிங் மிஷினும் தவறாம இருக்கு, இங்க தான் எதுக்கெடுத்தாலும் கடன்வாங்குனா கெட்டுப்போயிருவோம், தவ ணை க்கு பொருள் வாங்கி பழக்கக் கூடாது,,,,ன்னு வரிசையா பேச்சா பேசி அடுக் குனா எப்பிடி,,,,?,

“இப்ப இவ்வளவு புஸ்தங்களபடிச்சி என்ன நாட்டவா ஆளப்போறீங்க,வீட்ட செம்மையா நடத்துறதுக்கு வழியக்காணோம்,இதுல நாட்ட ஆளுறதப்பத்தி யோசிச்சா எப்பிடி, இருக்குற கவனிங்க மொதல்ல,பறக்குறதுக்கு அப்பறமா ஆசைப்படலாம்” என,

மனைவி சொன்னதை சொந்தக்கார அக்கா அப்படியே முன் மொழிந்தாள்,

“இங்க பாருங்க தம்பி நீங்க ஒண்ணும் கொறஞ்ச ஆளு கெடையாது,மாசம் பொறந்தா கை நெறைய சம்பளம் வாங்குற ஒரு அரசாங்க காரியஸ்தர்,அவ ஒண்ணும் ஒண்ணுமில்லாம ஒங்க வீட்டுக்குவாக்கப்பட்டு வந்தவ கெடையா து, இருபத்தைஞ்சி பவுன் நகையும் கையில் ரொக்கமா கொஞ்சம் பணமுமா வந்தவ ,இப்பம் பாருங்க எப்பிடி இருக்கான்னு,

“ஊருக்குள்ள போயி பாருங்க, அவன்அவன் பொண்டா ட்டிய எப்பிடி வச்சிருக் கான்னு,ஒரு கௌவர்மெண்ட் ஆபீஸூல வேலை பாக்குற நீங்க அவளையும் புள்ளைங்களையும் வச்சிருக்குற நெலைமையப் பாத்தா எங்களுக்கே எப்பிடி யோ இருக்கு தம்பி,நீங்க வேணுமுன்னா கொள்கை அது இதுன்னு கட்டுன வெள்ளை வேஷ்டி சட்டையோட அலையலாம்,ஆனா ஒங்களுக்கு வாக்கப் பட்ட பாவத்துக்குஒங்க பொண்டாட்டியும் ஒங்களுக்கு பொறந்த பாவத்துக்கு அந்த புள்ளைங்களும் என்ன செய்யும் பாவம்,,,,,?

“கட்டுன பொண்டாடிய பட்டுச் சேலை கட்டக்கூடாதுன்றீங்களாம்,நகை நட்டு கழுத்து நெறைய போட்டுக்கிட்டு அலையக்கூடாதுன்றீங்களாம்,புள்ளைங்கள பகட்டா திரியக்கூடாதுன்றீங்களாம்,அப்புறம் இந்த வயசுல திரியாம எந்த வயசுல அதுக பகட்டா திரியும் சொல்லுங்க,

“நீங்கமஞ்சப்பையி காலத்து ஆளு,அவுங்ககம்ப்யூட்டர் காலத்து டீன் ஏஜ்ஜர்ஸ் ,,,,,கொஞ்சம் யோசிங்க தம்பி,நீங்க ஒண்ணும் பெரிசா செஞ்சிற வேணாம் இவுங்களுக்கு,நீங்க நீங்களாவே இருங்க ,அவுங்கள அவுங்களுக்கான உலகத் துல வாழ விடுங்க,,,அது போதும் என சொந்தக்கார அக்கா சொன்னதை ஊரிலி ருந்து வரும்பொழுது பேசிக்கொண்டு வந்தார்கள்,

அந்த அக்கா சொன்னதில் உணமியில்லாமல் இல்லை/

உண்மைக்கும் ஒருபக்கம் பார்க்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறேன் போலிருக்கிறது என நினைத்துக் கொள்வான்.

தரையில் காலூனாமால் அந்தரத்தில் நடக்கப்பழகிய பழக்கம் இவனில் வேர் கொண்டுள்ளதோ என்கிற சந்தேகம் எப்பொழுதும் முளை விட்டுக்காணப்படு வதுண்டு அவ்வப்பொழுதாய்,,,,/

செல் போனின் ரிங் டோன் ஒலிக்கிற வேளைகள் தோறும் இவனில் இந்த எண்ணம் விரவிக் காணப்படுவதுண்டுதான்.அந்த விரவலின் மேடு பள்ளங்கள் ஆழக் காலுன்றியும் அகல விரித்துமாய் சொல்லிச்செல்கிற சேதிகள் நிறைய உண்டெனினும் கூட தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை தூக்கி எறிந்து விட்டுச்சென்று விடுகிறான்,

மாலதிஏன்அப்படிசப்தமாக பேசுகிறார் எனத்தெரியவில்லை அல்லது அப்படித் தான் பேசப்பிடிக்கிறதா அவருக்கு என்பதும் ஒரு கேள்வியாகவே இவனில்/

“அது வேறொண்ணுமில்லண்ணே, அதுல பாத்தீங்கன்னா இப்பம் நான் காலை யில ஐஞ்சி அஞ்சரைக்கெல்லாம் எந்திரிச்சிருவேன்,அதுஏங்பழக்கம் அப்பிடி, தா,,,,,,,,,,,இருபது வருஷமா பழகுன பழக்கத்த தீடீர்ன்னு மாத்திக்கிற முடியுமா சொல்லு,

“யார் வீட்டுல யெழவு விழுந்தாலும் சரி, நம்ம வேலை நடந்துக் கிட்டுதான் இருக்கும்,அது என்ன மழைன்னால்ம் சரி என்ன வெயில்லானாலும் சரி என்ன குளிர்ன்னாலும் சரி,அந்த வேலை தங்கு தடையில்லாமநடந்துரும் ஆமாம்,

“அப்பிடி அஞ்சி மணிக்கு எந்திரிக்கிறவன் வீடு தங்க மாட்டேன்,நேரா தெரு முக்குல இருக்குற டீக்கடையில போயிதான் நிப்பேன்,வீட்டுல கழுவுன மொகத்த அங்க போயிதான் தொடைச்சிக்கிருவேன்.டீக்கடைக்காரன் பாத்தி யின்னா அந்நேரமே நாலைஞ்சி ரகத்துக்கு வடைகள போட்டு வச்சிருப்பான், அதுல அவன் ஒரு வடை வச்சிருப்பான் பாரு,கேப்பை வடை,சூப்பரா இருக் கும்ண்ணே டேஸ்டு,

“செல கடைகள்ல பாத்தா ஆயிலா போட்டு வச்சிருப்பான்,தா,,,,,,வடையே எண்ணையில முக்கி எடுத்த மாதிரி இருக்கும்.நானும் நாலைஞ்சி கடைக ள்ல சாப்புட்டுப் பாத்துருக்கேண்ணே,ஆனா இது போல இவ்வளவு டேஸ்டா இருந் தது இல்ல.கடைக்கி போயி நின்ன வேகத்துல ஒரு கேப்பை வடை, ஒரு டீ முடிஞ்சி அப்பிடியே கெளம்பீருவேன் நடந்து,

“அது வாக்கிங்ன்னு சொன்னாலும் சொல்லலாம்,இல்ல சும்மா பொழுது போக நடக்குறேன்னுஎடுத்துக்கிட்டாலும்எடுத்துக்கிடலாம்ண்ணே,அப்பிடிபோறளவுக் கும் வர்ற அளவுக்கு ஒடம்பும் மனசும் தைரியமா இருக்குதுங்குறத காண்பிச் சிக்கிற போது கொரல மட்டும் கம்மியா வச்சிருந்தா எப்பிடி,,,,,,?

“போக அப்பிடி சத்தமா பேசுற சமயங்கள்ல எனக்குள்ள ஒரு புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுற மாதிரி இருக்கு.அதுதான் அப்பிடி பேசுறேனே ஒழிய வேற ஒரு சிறப்புக் காரணமும் இல்லண்ணே,

”ஏங் பேச்சுல சத்தம் இருக்குமே தவிர்த்து அதிகாரம் பண்ற தொணியும் ஆர்டர் போடுற அதிகாரமும் இருக்காது.,,,இப்பயும் பெரிய ஆள்ககிட்ட பேசும் போதும் முக்கியமான யெடங்கள்ல போயி பேசுறப்பவும் இந்த சத்தம் இருக்காது, அப்பயெல்லாம் நாந்தானா ஏங்கூட இருக்குறதுங்குற சந்தேகம் எனக்குள்ள வந்துரும்,இப்படியே பேசிப்பழகீட்டதுனால மாலதி சத்தக்காரன் சத்தக்காரண் ணே பேராகிப் போச்சி எனக்கு என்பார் சத்தக்காரரான மாலதி அண்ணன்,,,/